நோர்வேயில் ஏற்படவுள்ள அதிசயம்! இயற்கையை மீறி கற்பாறைக்குள் செல்லும் கப்பல்கள்

உலகிலேயே முதன்முதலாக கப்பல்கள் பயணிப்பதற்கான சுரங்க பாதையை அமைக்க நோர்வே திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக 315 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

இயற்கையினால் ஏற்படும் அனர்த்தம் காரணமாக, கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் நோக்கில் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது.

நோர்வேயின் மேற்குப் பகுதியிலுள்ள சுமார் எட்டு மில்லியன் தொன்கள் எடையுள்ள பாறையைக் குடைந்து இந்தச் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது.

ஒரு மணித்தியாலத்தில் ஐந்து கப்பல்கள் வரை இந்தச் சுரங்கம் வழியாகப் பயணிக்க முடியும். 2023ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

நோர்வேயின் மேற்குப் பகுதியில் உள்ளது ஸ்டாட் தீபகற்பம். இது, நோர்வேயின் மிக அபாயகரமான கடற்கரைப் பகுதியாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியின் பௌதிக அமைவின்படி, காற்று எத்திசையில் இருந்து வீசும் என்பதை எதிர்வு கூற முடியாது. ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்தும் கடும் காற்று வீசும். இதனால், ஸ்டாடவட் என்று சொல்லப்படும் இந்தக் கடற்பகுதியின் சகல திசைகளில் இருந்தும் பேரலைகள், கடற்சுழிகள் என்பன எழும்.

ஒரு நாள், இரண்டு நாட்கள் என்று அல்லாமல் ஏறக்குறைய வருடத்தின் அரைவாசி நாட்களில் இதேபோன்ற கடுமையான கால நிலையே நிலவும். இதனால், இப்பகுதியாகப் பயணிக்க வேண்டிய கப்பல்கள் கால நிலை சீராகும் வரை பல நாட்கள் கடலிலேயே காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கால விரயத்தைத் தவிர்ப்பதன் மூலம் அப்பகுதி வழியான கடல் போக்குவரத்தைச் சுமூகமாக்குவதன் மூலம் தேசிய வருமானத்தை அதிகரிக்க நோர்வே எண்ணியுள்ளது.

Share This Post

Post Comment